2வது பிரிவில் உள்ள அணிகள் மோதும் ஒரு ஆட்டம். முதல் சுற்று போட்டியில் வெற்றி பெற்று 3 புள்ளிகள் எடுத்த ஜெர்மனி அணியும், டென்மார்க்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த நெதர்லாந்து அணியும் மோதும் ஆட்டம் இது. இந்த போட்டியை வென்று அடுத்த சுற்றுக்குள் நுழையும் ஆர்வத்தில் ஜெர்மனி அணியும், எப்படியாவது இந்த போட்டியை வெற்றி பெற்று யூரோ 2012இல் நிலை கொள்ளவேண்டும் என்ற முனைப்பில் நெதர்லாந்து அணியும் மோதும் அற்புதமான ஆட்டமாக இது அமையும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. அதே எண்ணத்தோடு தான் நானும் பார்த்தேன்.
ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ரோபன் அடித்த பந்து பறந்து ஜெர்மனியின் காப்பாளார் கட்டத்துள் நுழைய, அதை சறுக்கி வந்தபடியே வான் பெர்சி இலக்கை நோக்கி அடிக்க, அது பாதுக்காப்பாக காப்பாளரின் கைகளில் புகுந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஜெர்மனி வீரர்களும் நெதர்லாந்தின் தடுப்பணையை தகர்த்து ஊடுருவ முயற்சி மேற்கொண்டனர். அப்பொழுது நெதர்லாந்தின் காப்பாளர் கட்டத்துக்கு சற்று வெளியே இருந்த ஒஜிலிடம் பந்து கிடைக்க சட்டென்று இலக்கை நோக்கி உதைத்தார். சற்றும் தாமதிக்காத நெதர்லாந்து காப்பாளர் அவருடைய இடது பக்கத்தில் வீழ்ந்து அந்த பந்தை உட்புகாமல் தடுத்தார்.
ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் மாரியோ கோமஸ், ஷுவான்ஷைனைடர் திறமையான முறையில் தனக்கு வழங்கிய பந்தை இலக்கினுள் அடித்து ஜெர்மனியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க வழி வகுத்தார். இது நெதர்லாந்துக்கு முதல் அதிர்ச்சியானது. இது இந்த யூரோ 2012 தொடரில் மாரியோ கோமஸ் அடித்த 2வது இலக்கு.
இருந்தாலும் மனம் தளராமல் அவர்கள் முன்னேறி கொண்டு தான் இருந்தார்கள். ஆட்டம் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருந்தது.
நெதர்லாந்தின் காப்பாளரின் இடது புறம் கிடைத்த free-kickஐ ஓசில் எத்த, பறந்து வந்த பந்தை ஜெர்மனியின் பட்ஸ்ஸப்பர்
தலையால் முட்டி போட முயன்றார். அது இலக்கை நோக்கி சென்று கொண்டு இருந்தது. சரியான நேரத்தில் காப்பாளர் நேர்த்தியான முறையில் தடுத்தார். ஜெர்மனி 2-0 என்று முன்னிலை வகிப்பதை தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆனால் இதை மீண்டும் 38வது நிமிடத்தில் தகர்த்தார் அதே மாரியோ கோமஸ். மீண்டும் அதே ஷுவான்ஷைனைடர், ஒரு அருமையான பந்தை காப்பாளருக்கு இடப்புறம் கொடுத்தார். பந்தை தன்வசம் வைத்துக்கொண்ட கோமஸ், அதை second post என்று சொல்லப்படும் அந்த வலது கம்பிக்கு அருகில் அடித்தார். காப்பாளர் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்பொழுது ஜெர்மனி 2-0 என்று முன்னிலை வகித்தது. இந்த தொடரின் இது மாரியோ கோமஸின் 3வது இலக்காகும்.
கிட்டத்தட்ட முதல் பாதி முடிவடையும் முன்பு ஜெர்மனிக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு. காப்பாளரின் வலது பக்கம் சற்று மேல்புரம் ஒரு free-kick கிடைத்தது. அதை மிக மிக நேர்த்தியான முறையில் ஷுவான்ஷைனைடர் எத்தினார். அது நெதர்லாந்தின் பின் கள தடுப்பு வீரர் தலையில் பட்டு காப்பாளரின் தலைக்கு மேல் சென்று இலக்கினுள் புக எத்தனிக்கும் பொழுது காப்பாளர் சிறப்பாக தடுத்தார். இல்லையென்றால் ஜெர்மனி முதல் பாதியில் 3-0 என்ற கணக்கில் அடுத்த சுற்றுக்கு பயணிக்கும் முதல் அணியாக இடம் பெற்று இருக்கும்.
முதல் பாதி முழுக்க முழுக்க ஜெர்மனியின் ஆதிக்கமே இருந்தது. அவ்வப்பொழுது தமிழகத்தில் வரும் மின்சாரம் போல் நெதர்லாந்து அணியினர் முன்னேறி சென்றார்கள்.
இரண்டாம் பாதி தொடங்கியது. வான் பொம்மலுக்கு பதில் வான்டர் வார்ட மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கினார். அவரே தலைவராகவும் இருந்தார்.
ஆட்டம் 52வது நிமிடத்தில் இருக்கும் பொழுது ஜெர்மனியின் மாட்ஸ் ஹம்மல்ஸ், பந்தை கடத்திக்கொண்டு முன்னேறினார். நெதர்லாந்தின் தடுப்பு வீரர்கள் வேடிக்கை பார்த்தபடியே இருந்தனர். அவர்கள் சுதாரிக்கும் முன் பந்தை இஅலக்கு நோக்கி எத்தினார், காப்பாளர் அதை தடுத்துவிட்டார்.
இங்கே 57வது நிமிடத்தில் வான் பார்சி, தானும் இருக்கிறார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தன் பங்கிற்கு பந்தை ஜெர்மனியின் இலக்கு நோக்கி எத்தினார். ஆனால் காப்பாளர் கீழே வீழ்ந்து அதை தடுத்துவிட்டார். ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் ஜெர்மணியே முன்னிலை வகித்தனர்.
இந்த முறை நெதர்லாந்தின் ஷினைடர் 63வது நிமிடத்தில் காப்பாளர் கட்டத்துக்கே வெளியே இருந்து அருமையான முறையில் உதைத்தார். காப்பாளர் அதை தடுக்கும் நோக்கத்தில் அவருடைய இடப்புறம் விழ்ந்தார். பந்து அவருடைய கையில் சிக்காமல், இலக்கினுள்ளும் நுழையாமல் சற்று தள்ளி வெளியானது.
ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் 0-2 என்று நெதர்லாந்து பின் தங்கியே இருந்தது. காப்பாளர் கட்டத்துக்கு உள்ளே தனக்கு கிடத்தி பந்தை தன்னுடைய இடது காலால் உத்தைத்தார் ரோபன். இந்த முறை ஜெர்மனி காப்பாளர் தடுப்பதற்கு முயலவில்லை. அவருக்கு தெரிந்திருக்கும் போல, அது வெளியே போகும் என்று.
அடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லோரும் ஒரு புறமிருக்க நெதர்லாந்தின் ஷினைடரிடம் பந்து கிடைக்க அதிவேகமாக அடித்தார். அதை ஜெர்மனியின் தடுப்புகள வீரர் சிறந்த முறையில் தடுத்தார். இந்நேரம் இரண்டு இலக்கு அடித்த மாரியா கோமஸ்க்கு பதில் மாற்று ஆட்டக்காரராக குலோசா களமிறங்கினார்.
அந்நேரம் வெளியே சென்ற பந்தை ஷினைடர் எடுத்து வீச. வான் பெர்சி தனியாக பந்தை கடத்தி சென்று காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்தார். அது சரியாக இலக்கினுள் புகுந்தது. காப்பாளர் கீழே வீழ்ந்து பிடிப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை. மிக மிக வேகமாக உட்ப்புகுந்தது. இதன் மூலம் ஆட்டத்தின் நிலை 73வது நிமிடத்தில் 2-1 என்று ஜெர்மனி முன்னிலையில் நிற்கிறது. இன்னமும் ஒரு இலக்கு அடித்தால் இந்த தொடரில் தன்னுடைய நிலையை தக்க வைக்கமுடியும் என்ற நிலையில் போராட்டம் நடத்தியது நெதர்லாந்து.
தன்னால் முயன்ற முயற்சிகளை நெதர்லாந்து வீரர்கள் செய்து கொண்டு இருந்தார்கள். இந்நேரம் ஜெர்மனியின் வீரர்களுக்கு பந்து கிடைத்தாலும் சீக்கிரமே நெதர்லாந்து வீரர்கள் கைப்பற்றினர். ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள் இருந்தன.
அந்நேரம் கூருஸ் என்ற மாற்று வீரர் ஓசிலுக்கு பதில் களமிறங்கினார்.
ஆட்டத்தின் கடைசி 7 நிமிடங்கள்.
வான்டர் வார்டின் ஒரு முயற்சி காப்பாளரின் இடப்புறம் வெளியே சென்றது. கடைசி நான்கு நிமிடங்கள். யூரோ 2012 தொடரில் நிலைக்க நெதர்லாந்து கடுமையாக போராடியது.
தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த நெதர்லாந்து கிட்டத்தட்ட வெளியாகிவிட்டது. இந்த அணி இத்தொடரில் நிலை பெற வேண்டும் என்றால் போர்ச்சுகளுக்கு எதிரான போட்டியில் அதிக இலக்குடன் வெற்றி பெற வேண்டும்; மேலும் ஜெர்மனி கண்டிப்பாக டென்மார்க் அணியை வெற்றி கொள்ள வேண்டும். அந்த ஆட்டம் சமநிலை என்று முடிந்தால் நெதர்லாந்து பெட்டியை கட்ட வேண்டும்.
இந்த வெற்றி மூலம் ஜெர்மனி அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.
No comments:
Post a Comment