Confederation cup 2013 Final, Brasil vs Spain
நடப்பு ஐரோப்பியா மற்றும் உலக வாகையர் பட்டம் வென்ற ஸ்பெயின், பிரேசிலுக்கு எதிராக பிரேசிலின் சொந்த மண்ணில் மோதும் இறுதி ஆட்டம். பிரேசிலை சொந்த மண்ணில் வீழ்த்துவது அத்தனை எளிதான காரியம் இல்லை. அவர்கள் சொந்த மண்ணில் விளையாடியது அவர்களுக்கு கூடுதல் பலம் என்றே சொல்லவேண்டும்.
ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்தில் வலது பக்கத்தில் இருந்து வந்த பந்தை பிரேட் தலையால் முட்டி இலக்கினுள் அடிக்க முயற்சி செய்து கீழே வீழ்ந்தார். ஸ்பெயின் காப்பாளர் காசியாஸ் பந்தை தடுக்க முயலும் பொழுது, பிரேட் படுத்துக்கொண்டே பந்தை உதைத்து இலக்கினுள் அடித்தார். ஆட்டத்தின் இரண்டாவது நிமிடமே ஸ்பெயின் அணிக்கு நெருக்கடியானது. இருந்தாலும் மனம் தளராமல் ஸ்பெயின் அணி முயற்சி செய்துக்கொண்டுதான் இருந்தனர்.
ஆனால் பிரேசில் அணி தங்களிடத்தில் பந்து கிடைத்தவுடன் ஸ்பெயினின் இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். பிரேசில் அணியின் விரைவான ஆடத்தை தடுக்கமுயலும் பொழுது ஸ்பெயின் அணியினர் நிறைய பிழை செய்தனர். அதனால் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரிக்கை செய்யப்பட்டனர். பிரேசில் தொடர்ந்து தங்களின் விரைவான ஆட்டத்தின் மூலம் ஸ்பெயினுக்கு நெருக்கடி கொடுத்தவன்னமாக இருந்தனர். ஆஸ்கார் அடித்த பந்து இலக்கிற்கு சற்று வெளியே சென்றது.
34ஆம் நிமிட ஆட்டத்தின் பொழுது ஸ்பெயினின் மாத்தா மாற்று ஜோர்டி ஆல்பா இருவரும் சேர்ந்து லாவகமாக பந்தை எடுத்து சென்றனர். மாத்தா தனியாக பிரேசிலின் காப்பாளர் கட்டத்திற்குள் புகுந்தார். அப்பொழுது பந்தை தடுக்கும் நோக்கத்துடன் பிரேசில் காப்பாளர் ஜூலியோ சீசர் முன்னே வந்தார். பந்து அவரைக்கடந்து இலக்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பிரேசிலில் அணியின் தடுப்புகள வீரர், சருக்கிக்கொண்டு வந்து பந்தை இலக்கிற்கு வெளியே செல்லும்படி அடித்தார். கிட்டத்தட்ட இலக்கினுள் பந்து சென்றுவிடும் என்று எண்ணம் கொண்ட ஸ்பெயின் அணி வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆட்டத்தின் 42வது நிமிடத்தில், ஆஸ்கார் வழங்கிய பந்தை பிரேசிலின் நட்ச்சத்திர வீரர் நெய்மார் இலக்கினுள் அடித்து பிரேசில் அணி 2-0 என்ற இலக்கு கணக்கில் முன்னேற வைத்தார். முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்துவிட்டது. ஸ்பெயின் 0-2 என்ற கணக்கில் பிந்தங்கிருந்த பொழுதும் இரண்டாம் பாதியில் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டம் துவங்கி 6 நிமிடங்களுக்கு பிறகு, பிரேட் மீண்டும் இலக்கினுள் அடித்தார். 3-0 என்ற கணக்கில் பிரேசில் முன்னணி அடைந்தது. இதன் மூலம் வாகையர் பட்டம் பிரேசில் அணிக்கு தான் என்று உறுதியானது. சற்று நேரம் கழித்து பிரேசில் காப்பாளர் கட்டத்தினுள் பிரேசில் வீரர் பந்தை தடுக்கும் எண்ணத்தில் செய்த சிறிய பிழைஇற்காக பெனால்டி கிக் வழங்கப்பட்டது. செர்ஜியோ ராமோஸ், பந்தை அடிக்க தயாரானார். ஆனால் அவர் அடித்த பந்து காப்பாளரின் வலது பக்கம் சென்றது. நேர்த்தியான முறையில் பிரேசில் காப்பாளர் சீசர் வெளியே தள்ளிவிட்டார். ஸ்பெயின் அணிக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு பறிபோனது.
ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் ஸ்பெயினின் காப்பாளர் கட்டத்தினுள் நுழைய முயற்சி செய்த நெய்மாரை தடுக்கும் எண்ணி அவர் காலை இடற செய்தார் பீக்கே. அவர் செய்த பிழையால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பித்து ஆடுகளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். 10வீரர்களோடு ஸ்பெயின் அணி வீரர்கள் தடுமாறினர்.
ஸ்பெயினின் டேவிட் வில்லா, பெட்ரோ, இனியாஸ்ட்டா போன்றவர்களின் முயற்சிகள் தடுப்பட்டது. பிரேசில் அணி மிக மிக பொறுமையான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். முரட்டு தனமாக ஆடவில்லை. அவர்கள் பந்து ஸ்பெயின் அணியினருக்கு கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர்.
ஆட்டத்தின் கடைசி 10நிமிடங்கள். நிச்சயம் ஸ்பெயின் அணி வீரர்கள் தங்களின் தோல்வி உறுதி என்பது போல விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர்களின் தொடர் வெற்றி இங்கு முடிவிற்கு வந்தது. பிரேசில் நடப்பு உலக கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியை 3-0 என்ற இலக்கு கணக்கில் வெற்றி கொண்டது. இதன் மூலம் கான்பெடரேசன் கோப்பையை நான்காவது முறையாக பிரேசில் அணி வெற்றிகொள்கிறது.
anna nalla karuthu
ReplyDeleteoru valiya spain tholvi adai vidargal
ReplyDelete