சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மரங்களைப் பேணிப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மண்ணையும் பாதுகாக்க வேண்டியது இன்று அவசியமாக உள்ளது. அதற்காக பல சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களில், சென்னை புதுக்கல்லூரி பயோ - டெக்னாலஜி துறைத்தலைவரான முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஈடுபாட்டுடன் பங்காற்றி வருகிறார். இதற்காக தமிழக அரசின் அறிஞர் அண்ணா விருது, எக்ஸ்னோராவின் "சுற்றுச்சூழல் நண்பன்' விருது உட்பட இங்கிலாந்து போன்ற நாடுகளின் விருதுகளையும் பெற்று இருக்கிறார். அவரிடம் பேசியதில் இருந்து...
""1968 - ல் மாநிலக்கல்லூரியில் பி.யு.சி. படித்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு சுற்றுச்சூழலில் ஆர்வம் அதிகம். குறிப்பாக, இயற்கை வளமான மண் வளத்தைப் பாதுகாத்து, அதனைப் பேணுவதில் அதிகம் ஆர்வம் இருந்தது. எனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் படித்தபிறகு, கடல் ஆராய்ச்சி தொடர்பாக 1977 - ம் ஆண்டு எம்.ஃபில் படிக்க முடிவு செய்தேன். அதற்காக நான் அணுகிய பேராசிரியர் என்னை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார். அந்த உதாசீனம் காரணமாக சுற்றுச்சூழலில் முக்கிய காரணிகளுள் ஒன்றாக உள்ள மண்ணைப் பாதுகாக்க எதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.
அதன் காரணமாக, விவசாயிகளின் சிறந்த நண்பனாக விளங்கும் மண்புழுவைக்கொண்டு 1978 - ம் ஆண்டில் மண்புழுஉரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். இவ்வாறுதான் எனக்கு சுற்றுச்சூழலில் ஆர்வம் ஏற்பட்டது. பலவிதமான சோதனைகள், முயற்சிகள் மேற்கொண்ட பிறகு, 1992 - ம் ஆண்டில் மண்புழு உரம் தயாரிக்கும் செய்முறைகள் குறித்த விளக்கக் கட்டுரை ஒன்றை "ஸ்பிக் பண்ணை செய்தி' என்ற இதழில் எழுதினேன். மண்புழுவால்தான் மண்ணின் வளம் பெருகும். இயல்பாக மண்ணுக்கும், தண்ணீருக்கும் எந்தவித வாசனையும் கிடையாது. ஆனால் நம் நாட்டில் அதிக விளைச்சலைப் பெற வேண்டும் என்பதற்காக, அதிக வீரியம் உள்ள உரங்களையும், மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் பயன்படுத்தி வருகின்றோம். இதனால் மண்ணின் வளம் மெல்லமெல்ல நச்சுத்தன்மையை அடைந்து வருகின்றது. இதற்கு உதாரணமாக, பஞ்சாப் மாநிலத்தில் பந்தித்தா என்ற கிராமத்தைச் சொல்லலாம். இங்கு உள்ள விவசாயிகள் கோதுமை உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்பதற்காக, ரசாயனங்கள் நிறைந்த ஆர்கோனா பாஸ்பேட், ஆர்கோனா குளோரைடு போன்ற உரங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு மண், நச்சுத்தன்மை உடையதாய் மாறிவிட்டது. எனவே இந்நிலத்தில் வளரும் மரம், செடிகள் கார்பன் டை ஆக்சைடு உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுவதற்குப் பதிலாக நச்சுத்தன்மை வாய்ந்த காற்றினை வெளியிடுகின்றன. இதனால் அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலான மக்கள் புற்று நோயாளிகளாக உள்ளனர். அந்த ஊரிலிருந்து வெளியூர்களுக்குச் செல்கின்ற ரயில்களில் அதிக எண்ணிக்கையிலான புற்று நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இதனால் அந்த விரைவு ரயில்களை "கேன்ஸர் எக்ஸ்பிரஸ்கள்' என்றே அழைக்கின்ற அவல நிலை அங்கு உள்ளது.
நம்நாட்டு விவசாயிகளிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் எவ்வளவுதான் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து அறிவுறுத்தினாலும் அதை விவசாயிகள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள முன்வருவதில்லை. அதன்காரணமாக, அவர்கள் அதிக விளைச்சலைப் பெறுவதற்காக, நச்சுத்தன்மை நிறைந்த பூச்சிக்கொல்லி உரங்களையும், மரபணு மாற்றப்பட்ட விதைகளையும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக இவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள்,பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகின்றோம். இதில் மரபணு மாற்றப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவதால், ஏற்படும் பாதிப்புகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறை போன்றவற்றை இலவசமாக சொல்லித் தருகின்றோம்.
ஆரம்பத்தில் எங்களுடைய இந்த முயற்சிகளுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. நாங்கள் நடத்துகின்ற இத்தகைய முகாம்களுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் வரத் தொடங்கினர். ஆனால் தற்போது இந்தப் பயிற்சி முகாம்களுக்கு வருகின்ற விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்தப் பூமியினை நாம் அடுத்த தலைமுறையினரிடம் பத்திரமாக ஒப்படைக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை. எனவே பள்ளி மாணவ, மாணவியருக்கும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றோம்'' என்றார்.
No comments:
Post a Comment