இது என்ன ஒரு யோகாவின் பெயர் ஆங்கிலத்தில் இருக்கே என்று யோசிக்கலாம். நானும் அப்படி தான் யோசித்தேன்.
சூப்பர் பிரைன் யோகா என்பது அமெரிக்கர்கள் கண்டுபிடித்து இருக்கின்றார்கள். இந்த யோகா தினமும் பதினான்கு முறை செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்குமாம். நான் சொல்லவில்லை அமெரிக்கர்கள் சொல்கிறார்கள். நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு இது தான் ஞாபக சக்தியை விரைவாக அதிகரிக்கும் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த யோகாவை செய்வது மிக மிக சுலபம் என்றும் சொல்கிறார்கள். ஆ! அப்படியா! சரி பார்ப்போமே என்று பார்த்தேன். அவர்கள் அதை எப்படி செய்யவேண்டும் என்று விளக்கிய விதம் இருக்கே, அப்பப்பா!!
சரி இந்த யோகாவை எப்பொழுது செய்யவேண்டும், இதனால் என்னென்ன ஆகிறது, யார் யார் செய்யவேண்டும் போன்ற கேள்விகள் இருக்கும்.
இதற்கும் விளக்கம் கொடுக்கிறார்கள். இது காலை, மதியம், மாலை, இரவும் செய்யலாமாம். இந்த யோகாவை எந்த வயதினரும் செய்யலாமாம். ஒன்றும் பிரச்சனை இல்லையாம். இதை செய்தால் நரம்புகள் புத்துணர்ச்சி பெறுகிறதாம். மேலும் ஞாபக சக்த்தியும் அதிகரிக்கிறதாம்.
சரி. இப்பொழுது இந்த சூப்பர் பிரைன் யோகாவை எப்படி செய்யவேண்டும். இதோ பார்ப்போம்.
௧) வலது கையை எடுத்துக்கொண்டு இடது காதருகில் கொண்டு சென்று வலது கை கட்டை விரல் மற்றும் ஆட்க்காட்டி விரல்களை திறந்து இடது காதை பிடித்துக்கொள்ளவேண்டுமாம்.
௨) பிறகு இடது கையை எடுத்துக்கொண்டு வலது காதருகில் கொண்டு சென்று இடது கை கட்டை விரல் மற்றும் ஆட்க்காட்டி விரல்களை திறந்து வலது காதை பிடித்துக்கொள்ளவேண்டுமாம்.
௩) பிறகு நாக்கை உட்ப்புரமாக மடித்துக்கொள்ளவேண்டுமாம்.
௪) நாக்கை மடிக்கொண்ட பிறகு மூச்சை இழுத்துக்கொண்டு நாற்காலியில் அமர்வது போல அமரவேண்டுமாம்.
௫) மூச்சை வெளிவிட்டுக்கொண்டே நிமிர வேண்டுமாம்.
இதை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாமாம். ஏன் காதை பிடிக்கணும் என்றால் அங்கு மர்மபுள்ளி (நம்மிடம் காது குத்திக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது) ஒன்று இருக்காம்.
அடிங்க. இதை தானடா நாங்கள் தோப்புக்கரணம் மற்றும் உத்திபோடுவது என்று நித்தமும் செய்வோம் என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால் என்ன உத்திப்போடுவது ஒரு மதத்தோடு ஒன்றிவிட்டது.
இதை செய்தால் நன்மை நடக்கும் என்று சொன்னால் நம்மக்கள் கேட்ப்பார்களா? இதை போல் செய்தால் கடவுள் கேட்டதை கொடுப்பார் என்றவுடன் நாம் ௰௮ (108) முறை என்ன ௱௮(1008) முறை கூட செய்வோம். பள்ளிகூடத்தில் ஆசிரியர்கள் தவறு செய்யும் மாணவர்களை ௰(10) தோப்புக்கரணம் போடு என்று சொல்வார்கள். நான் பள்ளிக்கூடம் படிக்கும் காலத்தில் இருந்தது. இன்று செய்ய சொல்லமுடியுமா? யார்ரா அந்த வாத்தி? என் பிள்ளையை தண்டிக்க இவன் யார் என்று கேட்ப்பார்கள்!! மேலும் போராட்டம் வேறு செய்வார்கள். அட பதர்களா இது தண்டனை இல்லை, பயிற்சி என்று எப்பொழுது உணர்வீர்கள். இது ஹிந்து மத பிள்ளையாக இருந்தால் மட்டும் தான். இதே கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய பிள்ளைகளாக இருந்தால், வேறு மதத்தினர் கோவிலில் செய்வது எங்கள் மதத்தை சேர்ந்த பிள்ளையை செய்யவைத்து எங்களை இழிவு படுத்திவிட்டார்கள் ஆசிரியர்கள். இப்படி மதவெறி பிடித்த ஆசிரியரை பணிநீக்கம் செய்யவேண்டும் என்று போராட்டத்தில் இறங்கி விடுவார்கள்.
ஏன் தண்டனைக்கு உள்ளாக வேண்டும். நாமே நம் பிள்ளைகளை நித்தமும் காலை கடன் முடித்தவுடன் ௰(10) ௰(10) ௰(10) என்று மூன்று முறை காலை மற்றும் மாலை பழக்கி வரலாமே. நம் பிள்ளைகளும் நல்லது.
நம்முடைய முன்னோர்கள் அறிவியலில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று நிறைய படித்தனின் மூலம் தெரிந்திருப்போம். அதே போல் நிறைய ஆசனங்கள் கற்றுத்தந்து சென்றுள்ளார்கள்.
நாம் தொடர்ந்து செய்து வருவதை அமெரிக்கர்கள் ஆராய்ச்சி செய்து இது தான் ஞாபக சக்த்திக்கு சிறந்த உத்தி(யுக்தி) என்று முடிவு செய்துள்ளார்கள். நம் ஆட்களே சிலர் வெள்ளையாய் இருப்பவன் சொன்னால் உண்மையாக தான் இருக்கும் என்று நினைத்து இதை செய்ய ஆரம்பித்துள்ளார்கள் (கறுப்பாக இருப்பவன் பொய் சொல்வானாம், என்னாங்கடா இது?)
நம் முன்னோர்கள் வகுத்த உத்திகளை நித்தமும் பழகுவோம், பின்பற்றுவோம். பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்போம். அடுத்த தலைமுறையை நல்லநிலைக்கு கொண்டு செல்வோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
இந்த பதிப்பு உண்மையாக பயனுள்ளதாக இருந்தால் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.
/// பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.../// - அது தான் மிகவும் முக்கியம்...
ReplyDeleteவித்தியாசமான பகிர்வு உங்களிடமிருந்து... தொடர வாழ்த்துக்கள்...