இன்றைய குறள்

Tuesday, February 28, 2012

தமிழ் வார்த்தைகள் கற்போம், பயன்படுத்துவோம் - 5

எத்தனை வார்த்தைகள். சொல்வதை, பேசுவதை எத்தனை வார்த்தைகளில் சொல்லலாம் என்று தமிழில் இருக்கிறது. வேறு மொழிகளில் இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.

விளம்புதல்: அறிவிப்பு போல ஒன்னைச் சொல்றது

விளத்துதல்: விளக்கமா, விவரமாச் சொல்றது

விள்ளுதல்: வெளிப்படையா, ஒளிமறைவில்லாம சொல்றது

விதத்தல்: சிறப்புக் கூட்டிச் சொல்றது

வலத்தல்: மனம் நோகுற மாதிரி, வலிக்கச் சொல்றது

மொழிதல்: வளமான சொற்கள் கொண்டு சொல்றது. கவிதைன்னு சொல்லிக்கிறீங்களே இப்பெல்லாம் நீங்க?

மிழற்றுதல்: குழந்தைகள் மாதிரி மழலையோட இனிக்க இனிக்கச் சொல்றது

பொழிதல்: இடைவிடாமச் சொல்றது.

பேசுதல்: இரண்டு பேர் மாறி மாறிச் சொல்லிக்கிறது

புலம்புதல்: தனக்குத் தானே சொல்றது

புகலுதல்: விருப்பத்தோட சொல்றது

புகழ்தல்: ஆகோ ஓகோன்னு மிகைப்படுத்திச் சொல்றது

பனுவுதல்: பாட்டுல புகழ்ந்து சொல்றது

பறைதல்: மறை ஒன்னை வெளிப்படுத்திச் சொல்றது

பகர்தல்: ஒன்னை ஒடச்சி சொல்றது

நுவலுதல்: நுண்ணிய ஒன்னைச் சொல்றது

நுதலுதல்: ஒன்னைச் சொல்லி, அதுல இருந்து சொல்றது

நவில்தல்: நாவால ஒழுகும்படியா சொல்றது

செப்புதல்: வினாவுக்கு விடை சொல்றது

சாற்றுதல்: ஒரே நேரத்துல பலர் அறியச் சொல்றது

கூறுதல்: கூறுபடுத்திச் சொல்றது, சூத்திரம் சூத்திரமா...

குழறுதல்: நாவு தளர்ந்து சொல்றது

குயிலுதல்: குடும்பக் கதை சொல்றது

கிளத்தல்: கடிந்து, கடுமையாச் சொல்றது

கரைதல்: குரலெழுப்பிச் சொல்றது

கத்துதல்: உரத்துச் சொல்லுதல்

ஓதுதல்: தொடர்ந்து சொல்லுறது

என்னுதல்: அடுத்தவங்க சொன்னது, செய்ததுன்னு சொல்றது

உளறுதல்: ஒன்னு கிடக்க ஒன்னைச் சொல்றது

உரைத்தல்: பொருள் விளங்கச் சொல்றது

இயம்புதல்: இசை கூட்டிச் சொல்லுறது

இசைத்தல்: ஓசை ஏற்ற இறக்கத்தோட சொல்றது

அறைதல்: வன்மையா மறுத்துச் சொல்றது

கதைதல்: கோர்வையா, அடுத்தடுத்துச் சொல்றது

அலப்புதல்: வீணா எதையுஞ் சொல்றது

ஊன்றல்: தெளிவாய்ச் சொல்றது

ஒக்கலித்தல்: அபிமானவங்களுக்குள்ள ஒருத்தர்க்கு ஒருத்தர் சொல்றது

கடுகுடுத்தல்: கோபமாச் சொல்றது

கம்பீரித்தல்: எடுப்பான குரல்ல சொல்றது

சடாய்த்தல்: பெருமிதமாச் சொல்றது

சித்தரித்தல்: அலங்காரமாச் சொல்லுறது

சிலேடித்தல்: இரு பொருள்ள சொல்றது, சாடை போடுறது

நருநாட்டியம்: குத்திக் காட்டிச் சொல்றது

நழுநழுத்தல்: பிடி கொடுக்காமச் சொல்றது

நிகண்டுதல்: எல்லாந் தெரிஞ்ச மாதிரி சொல்றது

மிண்டுதல்: திமிர்த்தனமாச் சொல்றது

நப்பிளித்தல்: இளிச்சு இளிச்சு சொல்றது

==============================
நன்றி: செம்மையின் பாலை

1 comment:

பழமொழி