எல்லாம் எனக்குத் தெரியுமென்ற
செருக்கு வேண்டாம் மனதினிலே;
வல்லவனுக்கு வல்லவன் இங்கு
வாழ்வான் எந்தன் உலகினிலே.
ஒன்றும் எனக்கில்லையென்று
உள்ளம் வாடத் தேவையில்லை;
ஒருவேளை உணவிற்கே இங்கு
வாடும் கோடி உயிர்கள் உண்டு.
இருப்பதைக் கொண்டு சிறப்பாக,
இன்பம் நிறைந்து வாழ்ந்திடலாம்;
மனநிறைவு ஒன்றே போதுமே,
மகிழ்ச்சி தானாய் வந்திடும்.
இல்லாதவர்க்கு நம்மாலானதை
ஈந்திடும் அந்த நொடியினிலே,
அவர்களின் கண்கள் காட்டுமே
அழகிய சொர்க்கம் நம் கண்முன்னே.
மறுபிறவி இங்கு உண்டோ இல்லையோ,
மனித வாழ்வு நிச்சயமில்லை;
நாமும் மகிழ்ந்து வாழ்வோம், நம்
நட்பையும் சுற்றமும் மகிழ்விப்போம்.
குறை, வஞ்சம், குரோதம், கோபம்
குப்பை போலத் தூக்கி எறிந்து,
பழகிய இனிய நாட்களை எண்ணி
பசுமை நினைவில் மகிழ்ந்திருப்போம்
No comments:
Post a Comment