இன்றைய குறள்

Saturday, January 11, 2014

பொங்கல் சிறப்பு கட்டுரை - உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?


முன்னுரை:-

                  மக்களுக்காக தான் அரசாங்கம். ஆனால் தமிழகத்தில் அரசாங்கத்திற்காக மக்கள் என்ற அவல நிலை. தங்களின் மீது நம்பிக்கை இல்லாத அரசியல்வாதிகள் தான் மக்களிடத்தே வாக்குகளை சேகரிக்க பணத்தையும் இலவசங்களையும் அள்ளித்தருவார்கள். ஏன் இலவசங்கள்? யார் இலவசங்களை கேட்டார்கள்? மக்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலா? அனைத்து மக்களுக்கும் இலவசங்கள் சென்று அடைகிறதா? இலவசங்கள் வழங்கினால் அரசாங்கத்தை சிறப்பாக நடத்த முடியுமா? இலவச பொருட்களை எப்படி வழங்குவீர்கள்? அதற்கான முதலீடு? பொருள்கள் வாங்கும் பணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை வகுக்கமுடியாதா? போன்ற கேள்விகள்  எல்லோர் மனதிலும் எழுவதைப்போன்று என் மனதிலும் எழத்தான் செய்கிறது!

பொருளுரை:-
                        படற முடியாமல் தவித்த முல்லை கொடிக்கு தேர் கொடுத்து கால் கடுக்க நடந்த பாரி மன்னன், புறாவிற்காக தன் தசை அரிந்து கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி , நீதி கேட்டு வந்த பசுவிற்காக சொந்த மகனை தேர் ஏற்றி கொன்று நீதி வழங்கிய மனு நீதி சோழன்  போன்ற நீதிவேந்தர்கள் ஆளுமை செய்த மண்ணில் இன்று நடக்கும் ஆட்சியின் அவலங்கள் எத்தனையோ இருக்கிறது.

                       மக்களாட்சி அதாவது சனநாயக ஆட்சி எப்படியிருக்க வேண்டும் என்று மன்னர் காலத்தே கல்வெட்டில் பதித்த உத்திரமேரூர் என்ற வரலாற்று சிறப்புமிக்க ஊர் இருக்கும் தமிழகத்தில் மக்களுக்காக ஆட்சி நடக்கிறதா என்று கேள்வி கேட்டால் இல்லை என்பது தான் பதிலாக இருககும்.
                     
தற்போதைய அரசியல்வாதிகள் தமிழகத்தின் வியாதிகள். அவர்கள் தமிழ்நாட்டின் சாபங்கள். தமிழர்கள் வாழ்க்கையில் வளரக்கூடாது என்று திட்டமிட்டு செய்வது போன்று ஓர் உணர்வு. எப்படி  இந்தியாவை, இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ஆட்சி செய்யக்கூடாது என்று நினைத்தோமோ, அதே போன்று தமிழகத்தை தமிழன் தான் ஆட்சி செய்யவேண்டும் என்று நினைக்க மறந்தோம். மலையாளி ஆட்சி செய்துவிட்டான், தெலுங்கன் ஆட்சி செய்து விட்டான், கன்னடன் ஆட்சி செய்கிறான். வந்தேரிகளை ஆட்சியில் அமரவைக்கும் ஒவ்வொறு முறையும் நம் துணி அவிழ்கிறது என்றறியாமல் இன்று கோமணத்தோடு நிற்கும் அவலம், உலகிலேயே நம்மினத்திற்கு மட்டும் தான் நடக்கும். நம்மை பற்றி, நம் பெருமையை பற்றி, நம் வரலாற்றை பற்றி அறியாத அறிவிலிகள் நம்மை ஆட்சி செய்தல் சாத்தியமா? அல்லது அது தான் முறையா?

                 மக்களின் வளர்ச்சியை  பற்றி கவலைப்படாத அரசியல்வாதிகள் தங்கள் குடும்ப நலனே பெரிது என்ற எண்ணத்துடனே ஆட்சி செய்கிறார்கள் .முன்னால் முதல்வர் அண்ணாதுரை அவர்கள், பணம் கொடுத்து வாக்கு கேட்டால் வாங்காதீர்கள் என்றும் அந்த பணம் பாவம் செய்ததால் வந்த பணம் என்று அறிவுரை கூறி வலம் வந்தார் .அப்படி வலம் வந்தவரின் அடியொற்றி நடக்கிறோம் என்றவர்கள்தான்  வளம் பெற்றார்கள், நாட்டையா வளப்படுத்தினார்கள் ? இன்று அண்ணாவின் பெயரால் ஆட்சி செய்யும், செய்த ஆட்சியாளர்கள் பணத்திற்கு வாக்கு என்ற நிலையை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் இலவசங்களையும் வாரி வழங்கி மக்களை சோம்பேறிகளாக மாற்றியே விட்டார்கள். எத்தனயோ பிரச்சனை தலைவிரித்து ஆடும் பொழுதும் எதையுமே கண்டுகொள்ளாமல் சுயநல அரசியலில் ஈடுபடுகின்றனர் .

                   உலகத்தின் முதன்மை தொழிலாம் வேளாண்தொழில் சிறப்புற நடந்தாலே மக்கள் மகிழ்சியடைவார்கள். வேளாண் தொழிலின் வளர்ச்சியை அலட்சியம் செய்யும் இவர்கள் உணவு உட்கொள்ள நிச்சயம் ஒரு விவசாயியின்  உழைப்பு தேவைப்படுகிறது என்பதை ஏனோ மறந்துவிட்டார்கள். பணம் சேர்ப்பதில் குறியோடு இருக்கும் இந்த குணம் கெட்டவர்களுக்குதான்  மானத்தோடு வாழ நினைக்கும் தன்மான சிங்கங்களை சோம்பேறிகளாக்கிய பெருமை சேரும் .

          காசுக்காக தன் சொந்த மக்களை பலியிடும் கூட்டத்தை என்ன சொல்வது. இது அரசியல்வாதிகள் செய்யும் விபச்சாரம். உழைத்து வாழ வழி செய்யாமல் இரந்து வாழ வைக்கும் யுத்தி. எதை சாதிக்க இந்த வழி. பல குடிகளை கெடுத்து சில குடிகள் தழைக்கவேண்டும் என்ற கேவலமான எண்ணம் ஏன் ? குடியுரிமை என்பதை தவறாக எண்ணிவிட்டார்கள் போல.குடிகளுக்கு குடியை தாராளமயமாக்கி  அவர்களின் சிந்தனைகள் சிதறிடாமல் ஒருமுகபடுத்துகிறார்கள் குடியை நோக்கி  .குடியும் குடித்தனமுமாக மக்களை இலவசங்களோடு வளமாய் வாழவைக்கிறார்கள் . தினமும் மீன்கள் தருவதை விட மீன் பிடிக்க கற்று தரலாமே இந்த அரசாங்கம்.
               இலவசங்களை  வழங்குவதற்கு பதிலாக அனைவருக்கும் சமச்சீர் கல்வியும், அதற்கேற்ற வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுத்தால் மக்களே தங்களுக்கான பொருள்களை வாங்கிக்கொள்வார்கள் என்று     அரசாங்கத் திற்கு தெரியாதா அல்லது தெரியாததை போன்று  நடிக்கின்றார்களா?..இலவசங்களை வாரி கொடுத்து அவர்களை கெடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் அரசாங்கமும், அதன் தலைமையும் தான் முழுபொறுப்பேற்க வேண்டும். தவறு செய்தவனை விட தவறு செய்ய தூண்டியவனுக்கே தண்டனை கடுமை என்று சட்டம் சொல்கிறது.


         ஒரு வரலாறும் இல்லாத நாடுகள் கூட, தங்கள் நாடு தான் வரலாற்றுக்கு சொந்தம் என்பது போல பிதற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நம் தமிழினம் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்கினோம் என்ற உண்மையை மறைத்து நம்மை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்றென்னுவது ஏன்?

              இலவசத்தை கொடுப்பதிலும் எத்தனை ஊழல்கள் பின்புலத்தில் நடப்பது யாருக்கு தெரியும். பேர் அறிந்திடாத நிறுவனங்கள் தமிழக அரசு என்று அச்சிட்டு அதை அரசாங்கம் சார்பாக  பெருமையாக  வழங்குவார்கள். இப்படி ஒரு நிறுவனம்  இருப்பது அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சொல்லும் பொழுது தான் நாமறிவோம். அந்த நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் மக்களின் வரிப்பணம் தமிழக மந்திரிகளின்  பையினுள் எவ்வளவு செல்கிறது என்பது  நமக்கென்ன தெரியும். மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் அரசியல்வியா(வா)திகள். மேலும் இலவச பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடத்தே பொருள்களை வழங்கும் ஒப்பந்தத்திற்கு கைரேகை வைக்க எவ்வளவு முழுங்கி விடுகின்றார்கள். அரசியல்வியா(வா)திகளுக்கு கையூட்டு கொடுக்கும் நிறுவனங்கள் தரமான பொருள்களை தயாரிப்பார்களா?? காசு கொடுத்தவர்கள் அதை இரட்டிப்பாக்க எண்ணுவார்களே ஒழிய, தரத்தை பற்றி சிந்திக்கவே மாட்டார்கள். அவர்களுக்கு தேவை முதலீட்டுக்கு மேல் லாபம் வேண்டும். அதில் எவ்வாறெல்லாம் சேமிக்க முடியும் என்று ஆராய்ந்து அனைத்து வழிகளிலும் சுருட்டமுயற்சி மேற்கொள்வார்கள். இதில் தரம், பொருள்களின் ஆயுள் அனைத்தும் மங்கிவிடும். பொருள்கள் பொதுவாக ஓர் ஆண்டு தாங்குவதே கேள்விக்குறியாகிவிடும்..

           பொருள்களை வழங்குவதில் தான் எத்தனை வேறுபாடு. எல்லோருக்கும் சென்றடைகிறதா என்று பார்த்தால் அது நிச்சயம் இல்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகமிருந்தால் அந்த பகுதிக்கு சென்றடையாது. என்ன ஒரு கேவலமான எண்ணம்? அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய அரசாங்கம் அவர்களின் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதில் முனைப்பு காண்பிப்பார்கள். மேலும் முன்னுரிமையும் வழங்குவார்கள். தரமற்ற பாரபட்சத்தோடு வழங்கும் பொருள்கள் வேண்டுமென்று யார் வேண்டினார்கள். அச்செலவாகும் பணத்தை ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தலாமே. மின்பற்றாக்குறைக்கு நிறைய மாணவர்கள் அரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கலாமே! அந்த கண்டுபிடிப்புகள் தரமானதாக இருந்தால் அரசாங்கமே நேரடியாக நிறைய தயாரித்து அதை அங்காடிகள் மூலமாக விற்பனை செய்து தமிழகத்தின் பொருளாதாரத்தை அதிகப்படுத்தலாமே! அரசாங்கமே நேரடியாக குறைந்த விலையில் விற்பனை செய்தால் நிறைய மக்கள் நம்பி வாங்கி பயனடைவார்கள். இதை தொழிற்சாலை துவங்கி உற்பத்தி செய்யும் பட்சத்தில் நிறைய மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இப்படி திட்டமிட்டு செய்யாமல் பொருளாதாரத்தை உயர்த்த மது விற்பனையில் தீவிரம் காட்டும் அரசாங்கத்திடம் என்ன பேசுவது? அது சரி பத்தி பத்தியாக எழுதினாலும் பாத்திகளில் நின்று வேலை வாங்கும் அதிகார வர்க்கத்திற்கு மற்றவர்களைப் பற்றிய கவலை எங்கே இருக்க போகிறது ?

           எந்த ஒரு நாடு உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களையும் ஊக்குவித்து தன்பால் கவர்கிறதோ அதுவே சிறந்த அரசாங்கம். தன் சொந்த மக்களின் திறமையை மதிக்காமல் வேற்று நாட்டிடம் சிந்தனையை பிச்சை கேட்கும் இழிவான செயலை நம்நாட்டு அரசியல்வியா(வா)திகள் தான் செய்வார்கள்.

முடிவுரை :-
              தேசபக்தி, பாசம்,  நல்லொழுக்கம், விவசாயம், சிந்தனை போன்றவைகள் குறைந்து வரும் இக்காலத்தில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளாக மாற்றிவரும் நச்சுகளை நீக்கியே தீரவேண்டும். இது எய்ட்ஸ், புற்றுநோய் போன்று கொடுமையான நோய். நோயாளிகளை குணப்படுத்துவதை விட இந்நோயை பரப்பும் அரசியல் கட்சிகளை அகற்றவேண்டிய கட்டத்தில் நாமுள்ளோம். எப்படி நச்சு விதைகளை தூவி நமது விவசாயத்தை அழித்தார்களோ, அதே போன்று இலவசங்களை வழங்கி மக்களை அடிமையாக்குகின்றார்கள். ஆண்ட இனம் அடிமையாகனுமா???ஆளுமை நிறைந்தவர்கள் நாம் ஆள்பவரை ஆளமுடியாதா என்ன ? மக்களே சிந்தியுங்கள் .முடியுமா என்ற எண்ணத்தை வீழ்த்தி முடியும் என்று முயலுங்கள் .(ஏ)மாற்றம் வேண்டும் அவர்களுக்கு... .மாறுங்கள் ,மாற்றுங்கள் ...வெற்றிக்கனி நம் கையில்... ........

8 comments:

 1. :) நிறைய பதிப்புகள் எதிர்பார்க்கின்றேன் : )

  ReplyDelete
 2. நல்லதொரு கட்டுரை... பதிவின் இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழரே...நேரமின்மை காரணமாக மேற்கோள்கள் குறிப்பிட்டு எழுத முடியவில்லை.

   Delete
 3. நல்ல முயற்சி. முயற்சி திருவினை ஆக்கும். தமிழோடு நட்பும் தழைக்கட்டும். தமிழர் திருநாள் வாழ்த்துகள் அய்யா. நன்றி வணக்கம்.

  ReplyDelete
 4. கட்டுரை மிக சிறப்பாக வந்துள்ளது. வாழ்த்துகள். தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள். நன்றி..

  ReplyDelete
 5. வணக்கம்.
  ரூபன்&பாண்டியன் இருவரும் இணைந்து நடத்திய.
  தைப்பொங்கல் சிறப்பு கட்டுரைப் போட்டி முடிவுகள் சகோதரன்(பாண்டியன்)தளத்தில் சென்று பார்வையிட இதோ முகவரி..
  http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1

  சான்றிதழில்தங்களின் பெயர் அச்சிட்டு தபாலில் அனுப்ப உள்ளதால் முகவரியை மின்னஞ்சல் செய்யுங்கள்....
  மீண்டும் அடுத்த போட்டி தலைப்புடன் வலையுலகில்
  சந்திப்போம்.....
  இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-


  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கார்த்திக் ! அருமையான கட்டுரை மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்...!

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.